கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க 

கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க 



என்னது கொரோனாவுக்கு நன்றி சொல்லனுமா, ஏன்யா, உலகமே கொரோனாவை கண்டு அலறி, பதறித் துடித்துக் கொண்டு, அந்த வைரஸை உலகத்தைவிட்டே விரட்ட போராடிக்க கொண்டிருக்கும் போது நீங்கள் என்னடான்னா கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க என்று சொல்வது நியாயமா? மனசாட்சி இருக்காயா உங்களுக்கு என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. தயவுசெய்து இந்த கட்டுரையை முழுமையாக படித்தால் கண்டிப்பாக ஆமாம்ப்பா சொல்வது சரிதான் என்று சொல்வீங்க. 


அந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா என்ற பெயர் கொண்ட‌ நுண்ணுயிரால் இன்று உலகம் முழுக்க இயற்கை தன்னைத் தானே புனரமைத்துக் கொண்டு வருவதோடு, மனிதர்களுக்கு அவரவர்களின் உறவுகளின் உன்னதங்களை உணர வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இயற்கை மனிதர்களுக்கு ஒரு தனிமையை உருவாக்கி, வீட்டில் முடக்கிப்போட்டு ‘இந்த குடும்பம்தான் உனது உலகம்’ என்ற உண்மையை புரிய வைத்திருக்கிறார். நமது மகிழ்ச்சியும், நமது பொழுதுபோக்கும் மால்கள், சினிமா தியேட்டர்கள், ஓட்டல்கள், பயணங்களில்தான் இருக்கிறது என கருதி சுற்றித் திரிந்து கொண்டிருந்தோம். அவை எல்லாம் நிஜமில்லை. நமது மகிழ்ச்சியும், பாதுகாப்பும், பொழுதுபோக்கும் நமது வீட்டிற்குள்ளேதான் இருக்கிறது’ என்ற உண்மையை இப்போது உணர்கிறோம். குடும்பம் மற்றும் உறவுகளின் மதிப்பு இப்போதுதான் பலருக்கும் புரிகிறது.
 
உணர்ந்து தெளியும் இந்த நேரத்தில், உறவு களோடு இதுவரை காட்டி வந்த இடைவெளி களால் சில நெருக்கடிகள் இருக்கத்தான் செய்யும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த இடைவெளியை குறைத்து, இணக்கத்தை உருவாக்குங்கள். அப்படி இணக்கத்தை உருவாக்கி, மகிழ்ச்சியாய் வாழ தம்பதிகள் என்னென்ன செய்யலாம்?
 
காதல் திருமணம் செய்த தம்பதிகளாக இருந்தால், இப்போது உங்களுக்கான தனிமை நேரத்தை உருவாக்கி நீங்கள் காதலித்த தருணத்தை பற்றி மனம்விட்டு பேசுங்கள். காதலித்த நேரத்தில் ஒருவருக்கொருவர் காத்திருந்தது, கேலி-கிண்டலான விஷயங்கள், ருசிகரங்கள், ஒவ்வொரு தடவையும் பார்ப்பதற்கு எப்படி எல்லாம் ஏங்கினீர்கள்? ஒரு தொடுதலும், ஒரு முத்தமும் எவ்வளவு சிலிர்ப்பை தந்தது என்பதை எல்லாம் உணர்வு ரீதியாக பேசி பகிர்ந்துகொள்ளுங்கள். அந்த காலகட்டத்தில் நீங்கள் ஒன்றாக எடுத்த போட்டோக்கள் இருந்தால், அவைகளை பார்த்து மலரும் நினைவுகளை அசைபோடுங்கள்.
 
பெற்றோர் பார்த்து பேசி முடித்துவைத்த திரு மணத்தில் இணைந்த தம்பதிகளுக்கும் தொடக்ககால நினைவுகள் ஏராளம் இருக்கும். அந்த நினைவலைகளை மீண்டும் வெளிக்கொண்டுவந்து பேசி, சிரித்து மகிழ்ந்து இணக்கத்தை மேம்படுத்துங்கள். இப்போது கொரோனா பயம் இருந்தாலும் அதை ஓரங் கட்டுங்கள். வீட்டிற்குள் இருந்தாலும் குளித்து, அலங்காரம் செய்துகொண்டு நேர்த்தியாக உைட அணிந்து உங்களவரை வசீகரிக்கலாம்.
 
வெற்றிகரமான மணவாழ்க்கைக்கு கணவன்-மனைவி இடையேயான ஈர்ப்பு மிக அவசியம். அந்த ஈர்ப்புதான் வாழ்க்கையை இன்பமாக்கும். ஓய்வில்லாமல் உழைத்து அந்த ஈர்ப்பு உங்களுக்குள் குறைந்துபோயிருந்தால், அதை புதுப்பித்துக்கொள்ளும் வாய்ப்பை இந்தச் சூழலில் உருவாக்குங்கள். ஒருவர் அழகை இன்னொருவர் புகழுங்கள்.
 
உயர்ந்த ரக ஓட்டலை தேடிச்சென்று சாப்பிடுவதுதான் மகிழ்ச்சி என்று சிலர் கருதுவீர்கள். ஆனால் உண்மையான சுகாதாரமும், மகிழ்ச்சியும் யாரோ சமைத்துக்கொடுத்த உணவில் இல்லை. உங்களுக்காக நீங்களே சமைத்து, சாப்பிடும் போதுதான் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும். அதை கணவரோடு அமர்ந்து ருசித்து சாப்பிடுங்கள்.
 
மால்கள் அடைத்தாலும், ஓட்டல்கள் முடங்கி அங்குள்ள ஊழியர்கள் எல்லாம் வேலையின்றி ஓய்வில் இருந்தாலும், எப்போதும் வேலை செய்யும் நிலையில் குடும்பத்தலைவிகள் இருக்கிறார்கள். இப்போது குடும்பமே வீட்டில் இருப்பதால் பெண்களின் வேலை அதிகரித்தி ருக்கிறது. எல்லா பெண்களுமே ‘தங்கள் கணவர் வீட்டு வேலைகளை பகிர்ந்துகொள்வதில்லை. தனது நலனில் அக்கறை செலுத்துவ தில்லை’ என்றெல்லாம் குறை கூறுவார்கள். அந்த குறையினை போக்கும் விதத்தில் கணவன்மார் மனைவி களுக்கு வீட்டு வேலைகளில் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். மனைவி செய்யும் வேலைகளையும் மனமுவந்து பாராட்ட வேண்டும்.
 
பெண்களில் ஒரு பகுதியினருக்கு படுக்கை அறை சுகமான அனுபவங்களை தராமல் சோகமான அனுபவங்களைத்தான் தருகின்றன. ஏன் என்றால் காலை முதல் இரவு வரை நடந்த அனைத்து பிரச்சினைகள் பற்றியும் படுக்கை அறையில் வைத்துதான் விவாதிக்கிறார்கள். அது அவர்களுக்குள் கருத்து மோதலை உருவாக்கி, தாம்பத்ய உறவிலும் பெரிய இடை வெளியை உருவாக்குகிறது. வீட்டில் அத்தகைய சூழல் நிலவினால் இந்த நேரத்தில் அதற்கும் ஒரு முடிவு கட்டுங்கள்.
 
திருமணத்திற்கு பின்பு அன்பை பெரும்பாலும் ஆண்கள் வெளிப்படு த்துவதில்லை. தனிமையில் வீடுகளில் இருக்கும் இந்த நாட்களில் அந்த குறையை போக்க முன் வாருங்கள். ‘நான் உன் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன்’ என தினமும் மூன்று முறையாவது சொல்லுங்கள். ‘ஐ லவ் யூ’ என்று அடிக்கடி கூறுங்கள். இதற்கு தனிமையான நேரங்கள் தேவையில்லை. எல்லா நேரங்களிலும் சொல்லலாம். சில ஆண்கள் படுக்கை அறைகளில்தான் காதல் உணர்வுடன் பேசுவார்கள். அப்படி இருக்கக்கூடாது. எல்லா நேரங்களிலும் மனைவியுடன் அந்த அன்பு உணர்வை வெளிப்படுத்தவேண்டும்.
 
கணவனும்-மனைவியும் சேர்ந்திருப்பதற்காக கிடைத்த இந்த வாய்ப்பினை அன்பை பெருக்குவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக இருவரும் அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயங் களுக்குள் தலையிட கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. கணவன்-மனைவியாக இருந்தாலும் இருவருக் குள்ளும் போதுமான தனிமையும், இடைவெளியும் அவசியம். இருவரும் வேலை பார்ப்பவர்களாக இருந்தால், அவர்களுக்கென்று அலுவலக பொறுப்பு களும் இருக்கும். அதை வீட்டில் இருந்தே மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். அதனால் அவர்களின் தொடர்புகளை கண்காணிப்பது, கருத்துச்சொல்வது போன்றவைகளை இருவருமே தவிர்க்க வேண்டும்.
 
கொரோனா வைரஸ் தொற்று வந்து விடுமோ என்ற‌ பயம் சிறிதுமின்றி வீடுகளில் தனிமையை கொண்டாடுங்கள். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்லும்போது முகக் கவசம், மற்றும் கையுறை அணிந்து செல்லுங்கள். மேலும் நீங்கள் செல்லும் இடங்களில் முறையாக சமூக இடைவெளியை கடைபிடித்தால் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்கலாம். 


என்னதான் கொரோனாவால் உயிரிழப்புக்கள், பாதிப்புக்கள், பொருளாதார சரிவு போன்ற தீமைகள் ஏற்பட்டாலும் நமக்கே நமது உறவுகளின் உன்னதங்களை உணரவைத்து நல்லது செய்யும் அந்த கொரோனாவுக்கு ஒரு ஓ போட்டு, கோடி நன்றிகளை தெரிவியுங்கள். 


=> இணையத்தில் கண்டெடுத்த கட்டுரைக்கு மேலும் மெருகூட்டியது விதை2விருட்சம் சத்தியமூர்த்தி 


#கொரோனா, #கொரோனா_வைரஸ், #நுண்ணியிர், #கோவிட், #தனிமை, #உறவுகள், #முக_கவசம், #கையுறை, #சமூக_இடைவெளி, #விதை2விருட்சம், #Corona, #virus, #Coronavirus, #Microbial, #Covid, #Loneliness, #Relationships, #Facial_Armor, #Mask, #Glouse, #Glove, #Social_Gap, Social_Distance, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,