ஊரடங்கு நீட்டிப்பு; தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை - தமிழக அரசு அறிவிப்பு

ஊரடங்கு நீட்டிப்பு; தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை - தமிழக அரசு அறிவிப்பு



ஜூன் மாத ஊரடங்கு முடியும் தருவாயில் ஜூலை மாதம் 31 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழகரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- 


தமிழக கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது  மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை உடனுக் குடன் வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.


அதே நேரத்தில், மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து பொருளா தாரத்தை மேம்படுத்த அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை வழங்கி வருவதுடன், சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய முதலீடு களை ஈர்த்தும், ஊரகத் தொழில்களை மீட்டெடுத்தும் தொழில் வளத்தைப் பெருக்க புதிய திட்டங்களை செயல்படுத்தியும் வருகின்றது.


இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது.


இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 30.6.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதே சமயம், ஏழை மக்கள் ஊரடங்கால் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் களைய, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரேசன் பொருட்கள் அனைத்தும், 2.01 கோடி குடும்பங்களுக்கும் விலையில்லாமல் வழங்க உத்தரவிட்டுள்ளதுடன், கட்டடத் தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர்கள் ஆகியோருக்கு அரிசி போன்ற பொருட்களை கூடுதலாக வழங்கியும், அனைத்து 17 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் மற்றும் பல்வேறு துறையில் உள்ள பிற நல வாரிய தொழிலாளர்களை சேர்த்து 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே தலா 1,000 ரூபாய் வழங்கியதைப் போல், மீண்டும் தலா 1,000 ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.


29.6.2020 அன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் மாண்புமிகு முதலமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தற்போது எடுக்கப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதால்தான், கொரோனா நோய்த் தொற்று ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது எனவும், நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளும் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்த வேண்டும் என கருத்துகளை தெரிவித்தார்கள்.


பல்வேறு தினங்களில் முதலமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 22.6.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் காட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், ஊரடங்கை தளர்த்துவதற்காக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும், 29.6.2020 அன்று பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை களின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து, கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் தற்போது 30.6.2020 முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவு, 31.7.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி மாலை மலர் 


#ஊரடங்கு, #கொரோனா, #நோய்_தொற்று, #ஜூலை, #விதை2விருட்சம், #Lockdown, #Corona, #Infection, #Ill, #disease, #July, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #curfew