சின்னத்திரை ப‌டப்படிப்பு - நிபந்தனைகளுடன் அனுமதி - தமிழக முதல்வர் அறிவிப்பு 

சின்னத்திரை ப‌டப்படிப்பு - நிபந்தனைகளுடன் அனுமதி - தமிழக முதல்வர் அறிவிப்பு 



கொரோனா ஊரடங்களால் நாட்டில் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன• அந்த வரிசையில் திரைப்படப் பணிகளும் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து வாடுகின்றனர். 


இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சின்னத்திரை படப்பிடிப்பை மீண்டும் துவங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சின்னத்திரையினரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, கீழ்காணும் நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளை நடத்தலாம் என்று அனுமதி அளித்துள்ளார்.


அரசு விதித்துள்ள நிபந்தனைகள் பின்வருமாறு: 


* சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கிற்குள் மட்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு இது பொருந்தாது.


* பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது. எனினும், ஊரகப் பகுதிகளில் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை ஏதும் இல்லை.


* பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது.


* படப்பிடிப்பு நடத்தப்படும் அரங்கம் அல்லது வீட்டினை படப்பிடிப்பிற்கு முன்பும், பின்பும் கண்டிப்பாக கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.


* படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர்கள், நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். 


* நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பின் இடைவேளையின் பொழுது தவறாமல் முகக்கவசம் அணியவேண்டும்.


* படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.


* படப்பிடிப்பு நடத்தப்படும் வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். 


* படப்பிடிப்பிற்கு உபயோகப்படுத்தப்படும் கேமரா, கிரேன் உட்பட அனைத்து சாதனங்களையும் கிருமிநாசினி கொண்டு அவ்வவ்போது சுத்தம் செய்ய வேண்டும்.


* சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும் கலைஞர்களையோ அல்லது தொழில்நுட்ப பணியாளர்களையோ படப்பிடிப்பு வளாகங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது. இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.


* அதிகபட்சமாக நடிகர், நடிகை தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 20 பேருக்கு  மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம்.


* சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவரிடமும் முன் அனுமதி பெற வேண்டும்.


#Serial_Shooting, #TNGovt, #சின்னத்திரை_படப்பிடிப்பு, #தமிழக_அரசு, #விதை2விருட்சம், #Serial, #Shooting, #சின்னத்திரை, #படப்பிடிப்பு, #Tamilnadu, #Government, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #Corona, #Covid19,