உன்னை நீ நம்பு – நம்பிக்கை ஒளி

உன்னை நீ நம்பு – நம்பிக்கை ஒளி
“சோர்வு என்பது சோம்பேறிகளின் தாரக மந்திரம். முயற்சி என்பது உழைப்பாளிகளின் தாரக மந்திரம்”

பொதுவாக பள்ளி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களின் திறமையை பாராட்டுவதை விட அவர்களின் நம்பிக்கையை நான் மனதார பாராட்டுகிறேன் ஏன் தெரியுமா?  மனத்திற்குள் நம்பிக்கை இருந்தால் தான் ஆர்வம்பிறக்கும், ஆர்வம் பிறக்கும்போது முயற்சி தொடரும், முயற்சி தொடரும்போது தேடு என்ற எண்ணம்பிறக்கும். அப்படி தேடும் போது உங்கள் திறமை பட்டைத் தீட்டப்படும். இந்த நம்பிக்கை என்ற ஐந்து எழுத்து வார்த்தை எவ்வளவு பலம் வாய்ந்தது என்று உங்களுக்கு தெரியுமா மாணவர்களே!மிகப்பெரிய ஆலமரமானாலும், உயரமான பனை மரமானாலும் சரி. அது ஒரு விதையின் நம்பிக்கையில் இருந்துதான் அதன் வளர்ச்சி தொடங்குகிறது. ஆம்! பூமிக்குள் புதைந்திருக்கும் விதையானது, நான் வளர்வேன் என்ற நம்பிக்கை அதனுள் இருப்பதால் தான், பூமியை ஆழ குடைந்து அதன் வேரையும், பூமிக்கு வெளியே பூமியைபிளந்து, வான் நோக்கி மரமாக அதன் விஸ்வரூப வளர்ச்சியை வெளி உலகிற்கு காட்டுகிறது. 


இந்த மரம்போலத்தான் உங்கள் வளர்ச்சி இருக்க வேண்டும். அதற்கு தேவை நம்பிக்கை என்ற மா மருந்து. உங்களை நம்பி இந்த சமுதாயம் இருக்கிறது. உங்கள் மீது உங்கள் பெற்றோரோ அல்லது உங்கள் ஆசிரியர்களோ நம்பிக்கை வைப்பது பெரிதல்ல. உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் அதுதான் உங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லும்.


வெற்றிக்காக போராடும்போது நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை வேண்டும். ஒருவேளை தோல்வியடைந்தால், அந்த தோல்வியை தாங்கும் சக்தி எனக்குள் இருக்கிறது. இந்த தோல்வியை வெற்றியாக்கி காட்டுவேன் என்ற நம்பிக்கை உங்களுக்குள் இருக்க வேண்டும்.  சோர்வு என்பது சோம்பேறிகளின் தாரக மந்திரம். முயற்சி என்பது உழைப்பாளிகளின் தாரக மந்திரம். இந்த இரண்டுக்கும் இடையே இருப்பது என்ன தெரியுமா? நம்பிக்கை தான். நம்பிக்கை இழந்தவன் சோர்ந்து, தளர்ந்து வீழ்கிறான். நம்பிக்கை இருப்பவன் விடா முயற்சியுடன் இயங்கி,வெற்றிகளை குவித்து வாழ்கிறான். ஆகவே மாணவர்களே! நம்பிக்கை முக்கியத்துவம் இதன்மூலம் தெள்ளத் தெளிவாக உங்களுக்கு விளங்கியிருக்கும் என்று நம்புகிறேன்.


விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 9884193081
(பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் நான் பேசியது)


#நம்பிக்கை #வாழ்வியல் #வாழ்க்கை #வெற்றி #சோம்பேறி #உழைப்பாளி, #விதைவிருட்சம், #Hope #Believe #Life #Success #Lazy #Hard_Worker #Hardly_Worker #vidhai2virutcham #vidhaivirutcham.page