இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்

இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்ஒருநாள் மதிய உணவு முடித்து எனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் வந்தார். அவர் என்னிடம் வந்து, “சார், நான், எனது சொந்த ஊரில் 6 ஆண்டுகளுக்குமேலாக‌ ஒரு நிறுவனம் நடத்தி வருகிறேன். அந்த நிறுவனத்தின் கிளை ஒன்று சென்னையில் திறக்க விரும்பி, இணைய தளம் மூலமாக வாடகைக்கு அலுவலகம் தேடிய போது அப்போது ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு அலுவலகம் வாடகைக்கு இருப்பதாக ஒரு விளம்பரம் வந்தது. உடனே நான் அந்த விளம்பரத்தில் உள்ள தொடர்பு எண்ணை தொடர்பு கொண்ட போது, ஒரு பெண்தான் பேசினார். அவர் என்னிடம் ரூ.1,50,000- (ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) முன்தொகை (அட்வான்ஸ்) என்றும் மாத வாடகை ரூ.15,000- (ரூபாய் பதினைந்தாயிரம்) என்று சொன்னார். அவர் சொன்னதை நம்பி, நானும் எனது நண்பரும் சென்னைக்கு வந்து அவரை நேரில் சந்தித்து, அவர் அளித்த வாக்குறுதியை நம்பி (எழுத்து மூலமாக எந்த ஆவணமும் செய்து கொள்ளவில்லை) இணையதளம் மூலம் அவர் கேட்ட தொகையை அவரது வங்கிக் கணக்கிற்கு செலுத்தினேன். அதன்பிறகு அந்த அலுவலகத்தின் சாவியை என்னிடம் ஒப்ப‌டைத்தார்.”


“சென்னையில் அலுவலகம் வாடகைக்கு கிடைத்த சந்தோஷத்தில், எனது அலுவலகத்திற்கு தேவையான பணியாளர்களை நியமித்து விட்டு, அவர்களிடம் சில பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டு நான் என் சொந்த ஊர் திரும்பிய இரண்டாவது நாளில், சென்னையில் உள்ள எனது பணியாளர், எனக்கு போன்செய்து என்னை உடனே சென்னை வரச் சொன்னார். நானும் என்ன ஏது என்று தெரியாமல் சென்னை வந்தேன். அங்கே கட்டிடத்தின் உரிமையாளர் என்று சொல்லிக் கொண்டு ஒரு பெண்ணும் அவரது கணவரும் என்னிடம், யார் நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள், உங்களுக்கு யார் வாடகைக்கு விட்டது என்று பல கேள்விகள் என் முன் வைத்தார்கள். நான் உடனே நடந்தவற்றை அப்படியே அவர்களிடம் சொல்லி, நான் முன்தொகை செலுத்தியதற்கு ஆதாரமாக இருந்த தகவலை அவர்களிடத்தில் காட்டினேன். ஆனால் அவரோ இந்த கட்டிடத்தின் உண்மையான உரிமையாளர் நான்தான் நீங்கள் உடனே காலிசெய்து சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று சொன்னார்கள்.


அதிர்ச்சியில் உறைந்து போன நான், உடனே, தன்னை உரிமையாளர் என்று சொல்லி என்னை ஏமாற்றி என்னிடம் பணத்தை பெற்றுக் கொண்ட அந்த பெண்ணுக்கு போன் செய்து விவரத்தை கூறி, எனது பணத்தை கொடுங்கள் என்று கேட்ட போது நேரில் வா என்று சொன்னார்கள். நான் நேரில் போனேன். அங்கே இதோ பார் உன்னிடம் வாங்கிய பணத்தை என்னால் திருப்பித் தர முடியாது, ஆனதை பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டார்கள். உடனே அவர் ஒரு வழக்கறிஞரை பிடித்து அவர் மூலமாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க ஒரு புகார் மனுவினை என்னிடம் காண்பித்து இந்த புகாரை காவல் நிலையத்தில் அளித்து அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கி விடுவேன் என்று கூறினார்.


எனக்கு அவரது நிலையை எண்ணி சிரிப்பதா வருந்துவதா என்றே தெரியவில்லை. நான் அவரிடம், சார், முதலில் நீங்கள் அவருக்கு கொடுத்த பணத்திற்கான ஆதாரம் எழுத்துப்பூர்வமாக இல்லை. அவர் வாய்மொழியாக கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் நீங்கள் பணத்தைக் கொடுத்துள்ளீர்கள். காவல் துறையினர் உங்கள் புகாரை எடுத்துக் கொண்டு உங்களை ஏமாற்றிய அந்த பெண்மணியிடம் விசாரிக்கும் போது அந்த பெண், எந்த ஆதாரமும் இல்லாமல் என்மீது குற்றம் சுமத்துகிறார் என்று சொல்லி நீலிக் கண்ணீர் வடித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். மேலும் காவல்துறையினர் எந்த அடிப்படையில் மேற்கொண்டு விசாரிப்பார்கள் என்று நான் சொன்னதும், அவர் என்னிடம் இல்லை சார், அவருக்கு நான் ஆன் லைனில் அனுப்பிய பணத்திற்கான சான்று என்னிடம் இருக்கிறது. அவரும் நானும் கடைசியாக‌ பேசிய‌ போன்கால் ரெக்கார்ட்டிங் இருக்கு என்றார்.


அவரது அப்பாவித்தனமான வார்த்தைகளை கேட்ட நான், அவரை முழுவதுமாக மனச்சோர்வுக்கு ஆட்படுத்த விரும்பாமல், அவரிடம் நான், “நீங்கள் காவல்துறையில் புகார் அளிப்பதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. புகார் அளியுங்கள். அதன்பிறகு உங்கள் அலுவலக கட்டிடத்தின் உண்மையான உரிமையாளரை நேரில் சந்தித்து, ஏதோ நான் ஏமாந்தேனோ அல்லது அவர் என்னை ஏமாற்றினாரோ, காவல்துறையில் அந்த மோசடி பெண்மீது புகார் அளித்துள்ளேன் என்றும் மேலும் அவரிடமே, எனக்கு 3 மாதங்கள் அவகாசம் கொடுங்கள். நீங்கள் சொல்லும் வாடகை தொகையை செலுத்துகிறேன் மேலும் இடத்திற்கு ஏற்றாற்போல் அவரிடம் பேசி சம்மதிக்க வையுங்கள் அதற்குள் காவல்துறையினர் முழு விசாரணைக்கு பயந்தோ அல்லது அந்த மோசடி பெண்ணே மனமிறங்கி பணத்தை திருப்பிக் கொடுத்தால் நீங்களே அதிர்ஷ்டசாலி என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.


இந்த காலத்தில் இப்படியும் ஒரு ஏமாளி என்று என் மனத்திற்குள் நினைத்தவாறே எனது அடுத்த வேலையில் மூழ்கினேன்.


விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 98841 93081


#இணையதளம், #வீடு, #வாடகை, #மோசடி, #முன்தொகை, #உரிமையாளர், #ஏமாளி, #ஏமாற்றுபவர், #பணம், #காவல்துறை, #வழக்கறிஞர், #வாடகை, #புகார், #விதை2விருட்சம், #Website, #home, #rental, #fraud, #prepaid, #owner, #cheater, #money, #police, #lawyer, #rent, #complaint, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhatovirutcham, #cheating